WI vs BAN, 3rd T20I: பூரன், மேயர்ஸ் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய அந்த அணியில் அனமுல், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - அஃபிஃப் ஹொசைன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஃபிஃப் ஹொசைன் அரைசதம் கடந்த கையோடு ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. விண்டீஸ் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் 7 ரன்னிலும், ஷமாரா ப்ரூக்ஸ் 12 ரன்னிலும், ஓடியன் ஸ்மித் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ் - கேப்டன் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் மேயர்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரன் 74 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பாற்றி அசத்தியது.