T20 WC 2024: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!

Updated: Sat, Jun 22 2024 13:43 IST
T20 WC 2024: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர்  டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய அமெரிக்கா அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கௌஸ் 29 ரன்களும், நிதிஷ் குமார் 20 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இதில் ஜான்சன் சார்லஸ் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாய் ஹோப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 82 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 27 ரன்களையும் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 10.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் கடந்த 2012ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 16 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்தது. 

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் 17 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மார்லோன் சாமுல்வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வாட்சன் ஆகியோர் தலா 15 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை