SL vs AUS, 3rd ODI: நிஷங்கா அதிரடி சதம்; ஆஸியை வீழ்த்தியது இலங்கை!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்திருந்தது.
இந்நிலையில், 3ஆவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 9 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 10 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் லபுசாக்னேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன அரோன் ஃபிஞ்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபிஞ்ச் அரைசதம் அடித்தார். ஆனால் மறுமுனையில் லபுசாக்னே 29 ரன்களில் ஆட்டமிழக்க, 62 ரன்கள் எடுத்திருந்த ஆரோன் ஃபிஞ்சும் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி - ட்ராவிஸ் ஹெட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேரி 49 ரன்களில் ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதத்தை தவறவிட்டார்.
அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ட்ராவிஸ் ஹெட் அரைசதம் கடந்ததுடன், 70 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் ஜெஃப்ரி வண்டர்சே 3 விக்கெட்டுகளைக் கைப்பறினார்.
அதன்பின் 292 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர் டிக்வெல்லா 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிஷங்காவும் குசால் மெண்டிஸும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 213 ரன்களை குவித்தனர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தர். அதேபோல் மறுமுனையில் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குசால் மெண்டிஸ் 87 ரன்களுக்கு ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.
அதன்பின் 137 ரன்களை குவித்த நிசாங்கா, இலங்கையின் வெற்றிக்கு வெறும் 8 ரன் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். நிசாங்கா இலங்கை அணியை கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றதால் அந்த இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-1 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.