நான் ஸ்பின்னர்களை அடிக்க வேண்டும் என நினைத்தேன் - நிதீஷ் ரெட்டி!

Updated: Wed, Apr 10 2024 15:29 IST
நான் ஸ்பின்னர்களை அடிக்க வேண்டும் என நினைத்தேன் - நிதீஷ் ரெட்டி! (Image Source: Google)

 

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறி தடுமாறிய நிலையில் நிதீஷ் ரெட்டியின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 64 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதேசமயம் அதிரடியாக விளையாடி சாம் கரன், சிக்கந்தர் ரஸா ஆகியோரும் போதிய ரன்களைச் சேர்க்க தவறினர்.

இருப்பினும் இறுதிவரை போராடிய ஷஷாங்க் சிங் 46 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 33 ரன்களை சேர்த்த போது, அந்த அணியால் 20 ஓவர்களில் 180 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. மேலும் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நிதீஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை ஆற்ற விரும்புகிறேன் என நிதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை இது எனக்கும், என்னுடைய அணிக்கும் மிகப்பெரிய பங்களிப்பாகும். நான் என்னை நம்ப வேண்டும், அணிக்காக நான் களத்தில் இருக்க வேண்டும் என்று என் மனதுக்குள் நான் சொல்லிக் கொண்டேன். இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுக்குள் வைத்திருந்தனர். இதனால் நான் அவ்ர்களுக்கு எதிராக எனது ஷாட்டுகளை அடிக்க விரும்பவில்லை. 

மேலும் இப்போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் தடுமாறுவதை கவனித்தேன். அதனால் நான் அவர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடலாம் என முடிவுசெய்தேன். மேலும் போட்டி முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்லோ பவுன்சர்களை வீசினார்கள். அது எனக்கு சாதகமாக அமைந்தது. நானும் மைதானத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டேன். இத்தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை