இந்தியா - பாகிஸ்தான் தொடர் எப்போது? ஜெஃப் அலார்டிஸ் பதில்!

Updated: Sat, Nov 13 2021 17:52 IST
No India vs Pakistan bilateral series until the two boards agree: ICC Interim CEO Geoff Allardice (Image Source: Google)

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடேயையான போட்டி என்றால் எப்போதும் அதில் அனல் பறக்கும். கிரிக்கெட்டை பார்க்காமல் இருப்பவர்கள் கூட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி என்றால் கட்டாயம் பார்ப்பார்கள்.

அப்படி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் வீரர்கள் தங்கள் உச்சபட்ச திறனை வெளிப்படுத்தும் போட்டியாகவே எப்போதும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் இருந்து வந்துள்ளன. இருப்பினும், 2012க்கு பிறகு, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. 

ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன. கடைசியாக 2012ஆம் ஆண்டு இந்தியா வந்த பாகிஸ்தான் அணி 2 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியது. இதில் டி20 தொடர் சமனில் முடிய, ஒரு நாள் தொடரைப் பாகிஸ்தான் கைப்பற்றியது. அதன் பிறகு இரு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் எதுவும் நடைபெறவில்லை.

அதன் பிறகு உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதின. அதன்படி இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை எளிதாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். ஐசிசி தொடரில் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். சூப்பர் 12 சுற்றில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா, அத்துடன் நடையைக் கட்டியது.

மறுபுறம் சூப்பர் 12 சுற்றில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான், ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இருப்பினும், அரையிறுதியில் கடைசிக் கட்டத்தில் பாகிஸ்தான் சொதப்ப ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கோட்டைவிட்டது. 

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் கிரிக்கெட் தொடர குறித்து ஐசிசி அமைப்பின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து பேசிய ஜெஃப் அலார்டிஸ் "இரு அணியும் ஐசிசி தொடர்களைத் தாண்டி மோதிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் இரு நாடுகளுக்கும் வாரியங்களுக்கும் இடையிலான நல்ல உறவு இல்லை. இதில் ஐசிசியால் தலையிட முடியாது. 

எனவே இப்போது கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது. இரண்டு நாடுகள் விளையாட வேண்டுமா வேண்டாமா என்பதை அந்த நாடுகள் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

Also Read: T20 World Cup 2021

2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் வகையில் இல்லை. இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், பொதுவான மைதானத்திலேயே போட்டி நடைபெறும். ஐசிசி தொடர் வெற்றிகரமாக நடந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை