அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அஹ்மத்!

Updated: Wed, May 21 2025 13:45 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது. 

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத் சிறப்பு சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.  

அதன்படி இப்போட்டியில் நூர் அஹ்மத் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நூர் அஹ்மத் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஒரு சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருந்தனர்.

தற்போது அவர்களைப் பின்னுக்கு தள்ளி நூர் அஹ்மாத் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் இந்த பட்டியலில் முன்னாள் வீரர் இம்ரான் தாஹீர் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்

  • 26 - இம்ரான் தாஹிர் (2019)
  • 21* - நூர் அகமது (2025)*
  • 20 - ரவிச்சந்திரன் அஸ்வின் (2011)
  • 20 - ரவீந்திர ஜடேஜா (2023)

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த  சிஎஸ்கே  அணியில் ஆயூஷ் மாத்ரே 43 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 42 ரன்களையும், ஷிவம் தூபே 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது.

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களையும், வைபவ் சூர்யவன்ஷி 57 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை