இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பிலிப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.
இதில் சுனில் நரைன் 23 பந்துகளிலும், பிலிப் சால்ட் 25 பந்துகளிலும் என அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்கள் சேர்த்த நிலையில் சுனில் நரைன் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 75 ரன்கள் குவித்த நிலையில் பில் சால்ட்டும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்களையும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய பிரப்ஷிம்ரன் சிங் 18 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில், 54 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - ஷஷாங்க் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் சதமடித்தும், ஷஷாங்க் சிங் அரைசதம் அடித்தும் அசத்தினர். இதில் பேர்ஸ்டோவ் 108 ரன்களையும், ஷஷாங்க் சிங் 68 ரன்களை எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “டி20 கிரிக்கெட்டில் முதல் பேட்டிங் செய்யும் எந்த அணியிடம் 262 ரன்களை கொடுத்தாலும் அவர்கள் அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். எங்கள் அணியில் சுனில் நரைன், பிலிப் சால்ட் இருவரும் அட்டகாசமாக பேட்டிங் செய்தார்கள். இந்த போட்டியில் இரு அணிகளுமே அபாரமாக பேட்டிங் செய்தார்கள் என்றே நினைக்கிறேன்.
இதுபோன்ற போட்டிகளில் தவறு எங்கு நடந்தது என்பதை உட்கார்ந்து ஆலோசித்து கண்டறிய வேண்டும். அதிலும் 260 ரன்கள் இலக்கை கூட எங்களால் டிஃபெண்ட் செய்ய முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த ஆடுகளத்தையும் பிட்சையும் புரிந்து கொண்டு புதிய திட்டத்துடன் அடுத்தப் போட்டியில் களமிறங்க வேண்டும். சுனில் நரைனின் பேட்டிங் பார்க்க நன்றாக இருந்தது. இதனை அவர் தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்