NZ vs BAN, 2nd Test: இரட்டை சதத்தை நோக்கி லேதம்; நியூசிலாந்து அபாரம்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி நியூசிலாந்து வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லேதம் - வில் யங் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் வில் யங் 54 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையிலிருந்த கேப்டன் டாம் லேதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 13ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
அதன்பின் அவருடன் இணைந்து விளையாடிய டேவன் கான்வேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். மேலும் இன்றைய நாளில் கான்வேவும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆட்டம் நேரம் முடிந்ததால் அவர் தனது சதத்தைப் பூர்த்தி செய்ய நாளை வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.
இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 349 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
இதில் கேப்டன் டாம் லேதம் 186 ரன்களுடனும், டேவன் கான்வே 99 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் சொரிஃபுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.