NZ vs BAN: கான்வே, பிலீப்ஸ் காட்டடி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் நியூசிலாந்து - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டேவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
இதில் 32 ரன்கள் எடுத்திருந்த ஃபின் ஆலன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய மார்ட்டின் கப்திலும் தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே அரைசதம் கடந்தார்.
பின் 40 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசியிருந்த டெவான் கான்வே 64 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிளென் ப்லீப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என மொத்தம் 60 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்த்து அசத்தியது. வங்கதேச அணி தரப்பில் எபோடட் ஹொசைன், சைஃபுதின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.