NZ vs ENG, 1st test Day 4: தடுமாற்றத்தில் நியூசிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர் கான்வேவின் இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை குவித்தது.
இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் 3ஆம் நாளான நேற்றைய ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் மட்டும் நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் மறுமுனையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ் மட்டும் களத்தில் நங்கூரம் போட்டு நிலைத்து ஆடி சதமடித்தார். பர்ன்ஸுடன் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராபின்சன் சிறப்பாக ஆடினார். ஆனால் அவரும் 42 ரன்னில் சௌதியின் பந்தில் ஆட்டமிழக்க, ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட் ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, சதமடித்த பர்ன்ஸ் கடைசி விக்கெட்டாக 132 ரன்னில் ஆட்டமிழக்க, 275 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.
நியூசிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய டிம் சௌதி, அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 103 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் டாம் லேதம் - டேவன் கான்வே இணை களமிறங்கியது.
இதில் முந்தைய இன்னிங்ஸில் 200 ரன்களை விளாசிய கான்வே இம்முறை 28 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் லேதம் உடன் இணைந்த கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியில் டாம் லேதம் 30 ரன்களுடனும், நெய்ல் வாக்னர் 2 ரன்களுடனும் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர உள்ளனர்.