NZ vs ENG 1st test, Day 4: சௌதி வேகத்தில் சரிந்த இங்கிலாந்து; பர்ன்ஸ் அபார சதம்!

Updated: Sun, Jun 06 2021 14:56 IST
Image Source: Google

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடந்துவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர் கான்வேவின் இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை குவித்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் 3ஆம் நாளான நேற்றைய ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் மட்டும் நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் மறுமுனையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை நிலை குழையச் செய்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து விளையாடிய ரோரி பர்ன்ஸ் சதமடித்து அணிக்கு உதவினார். பின்னர் 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோரி பர்ன்ஸும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 6 விக்கெட்டுகளையும், கைல் ஜெமிசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை