NZ vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (மார்ச் 29) தொடங்கியது. அதன்படி நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் வில் யங், நிக் கெல்லி மற்றும் ஹென்றி நிக்கோலஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மார்க் சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய டேரில் மிட்செலும் அரைசதம் கடக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களை எட்டியது.
அதன்பின் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 76 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 132 ரன்களை எடுத்திருந்த நிலையில் மார்க் சாப்மேனும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், அறிமுக வீரான முகமது அப்பாஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 24 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணியானது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் இர்ஃபான் கான் 3 விக்கெட்டுகளையும், அகீஃப் ஜாவெத் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் உஸ்மான் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர் .
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களைச் சேர்த்திருந்த உஸ்மான் கான் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷஃபிக்கும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த பாபர் ஆசாம் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
மறுமுனையில் ரிச்வான் 30 ரன்களை எடுத்த கையோடு நடையைக் கட்ட, அரைசதம் கடந்து விளையாடி வந்த பாபர் ஆசாம் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் சல்மான் அலி ஆகா 50 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. நியூசிலாந்து தரப்பில் நாதன் ஸ்மித் 4 விக்கேட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.