NZ vs SL, 1st Test: டேரில் மிட்செல் சதம்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை!

Updated: Sat, Mar 11 2023 11:35 IST
Image Source: Twitter

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இலங்கைஅணி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றால் இலங்கை அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

அதனால் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்கிய இலங்கை அணி முதல் டெஸ்ட்டில் அபாரமாக ஆடிவருகிறது. நியூசிலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் கேப்டனும் தொடக்க வீரருமான திமுத் கருணரத்னே அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் குசால் மெண்டிஸ் அடித்து விளையாடி 83 பந்தில் 87 ரன்கள் அடித்தார். ஆஞ்சலோ மேத்யூஸ்(47), தினேஷ் சண்டிமால்(39) மற்றும் தனஞ்செயா டி சில்வா(46) ஆகியோரும் பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் அடித்தது இலங்கை அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்களை சேர்த்தனர். கான்வே 30 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டாம் லேதம் 67 ரன்கள் அடித்தார். கேன் வில்லியம்சன்(1), ஹென்ரி நிகோல்ஸ்(2), டாம் பிளண்டெல் (7) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 151 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. 

இதனால் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டேரில் மிட்செல் 40 ரன்களுடனும், அவருடன் மைக்கேல் பிரேஸ்வெல்லும் தொடர்ந்தனர். இதில் மைக்கேல் பிரேஸ்வெல் 25 ரன்களிலும் அடுத்து வந்த டிம் சௌதீ 25 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் சதமடித்து அசத்தினார். அதன்பின் 102 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல்  அட்டமிழக்க, அடுத்து வந்த மேட் ஹென்றியும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார். பின் அவரும் 72 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 20 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாதா ஃபெர்னாண்டோ - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 17 ரன்களிலும், ஒஷாதா 28 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 65 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி நாளைய ஆட்டத்தைத் தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை