NZ vs AUS, 1st Test: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டெவான் கான்வே!

Updated: Wed, Feb 28 2024 13:04 IST
NZ vs AUS, 1st Test: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டெவான் கான்வே! (Image Source: Google)

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அந்த அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை அஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியதுடன், நியூசிலாந்தையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த டெவான் கான்வே காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். 

அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அப்போட்டியில் மீண்டும் களத்திற்கு வரலாமல் இருந்த டெவான் கான்வே, அதன்பின் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் தான் தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு மாற்றாக ஹென்றி நிக்கோலஸ் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட், “ஒரு முக்கியமான போட்டிக்கு முன்னதாக டெவான் கான்வே விலகியுள்ளது ஏமாற்றமளிக்கிறது. மேலும் டாப் ஆர்டர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் ஒரு கிளாஸ் பிளேயர், அவர் இந்த தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் தற்போது அவரால் இப்போட்டியில் விளையாடமுடியாதது வருத்தமளிக்கிறது. 

அதேசமயம் அவருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஹென்றி நிக்கோலஸும் திறமையான வீரர்தான். அவர் மீண்டும் அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அவருக்கு நிறைய டெஸ்ட் அனுபவம் உள்ளது மட்டுமின்றி, அவரால் எந்த பேட்டிங் வரிசையிலும் சிறப்பாக செயல்பட முடியும்” என்று தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை