#Onthisday: ஒன் மேன் ஷோ காட்டிய கபில் தேவ்!
கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜூன் 18, 1983) உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் தொடக்க வீரர்கல் சுனில் கவாஸ்கர், கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், சந்தீப் படேல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் 9 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அதன்பின் களமிறங்கிய கேப்டன் கபில் தேவ், யாரும் எதிர்பாராத ஒரு இன்னிங்ஸை விளையாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதிலும் 9 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கபில் தேவ் - சயீத் கிர்மானி இணை பார்ட்னர்ஷிப் முறையில் 126 ரன்களைச் சேர்த்து புதிய சாதனையயும் படைத்தது. இப்போட்டியில் 138 பந்துகளை எதிர்கொண்ட கபில் தேவ் 16 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 175 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
அப்போதைய காலகட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது. இதன் மூலம் 60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும், இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
கபில் தேவின் இந்த ஒரு இன்னிங்ஸ் இந்திய அணி முதல் முதலாக உலகக்கோப்பை கைப்பற்ற ஒரு முன் உதாரணமாக அமைந்ததும் என்பது குறிப்பிடத்தக்கது.