சிக்சர் அடித்தல் உலகக்கோப்பையை வெல்லமுடியுமா? கொந்தளிப்பில் கம்பீர்!
இதே நாளில் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி இருந்தது. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. அதிலும் கேப்டன் தோனி சிக்சர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். தோனியின் அந்த ஒரு சிக்சர் அதன் பிறகு பிரபலமாக பேசப்பட்டது.
கடந்த ஆண்டு இணையதளம் ஒன்றில் ‘இந்தியா கோப்பையை கைப்பற்ற காரணமான சிக்ஸர்’ என ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதனை அப்போதே கம்பீர் ட்வீட் மூலம் விமர்சித்திருந்தார். தற்போது அது தொடர்பாக அவரிடம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பபியது.
அதற்கு பதிலளித்த கம்பீர், தனி ஒருவர் தான் நமக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார் என எண்ணுகிறீர்களா? அப்படி ஒரே ஒரு தனி நபரால் அது சாத்தியம் என்றால் இந்தியா அனைத்து உலக கோப்பையையும் இதுவரை வென்றிருக்க வேண்டும் அல்லவா? இந்தியாவில் ஒரே ஒருவரை மட்டும் கொண்டாடுவது வாடிக்கையாகிவிட்டது. எனக்கு அதில் துளி அளவு கூட நம்பிக்கை இல்லை. குழு விளையாட்டில் தனி ஒரு நபருக்கு இடமே இல்லை. இங்கு பங்களிப்பு தான் அவசியம்.
ஜாகிர் கானின் அற்புதமான பந்து வீச்சை மறந்து விட முடியுமா? இறுதி போட்டியின் முதல் ஸ்பெல்லில் மூன்று மெய்டன் ஓவர்களை அவர் வீசியிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜின் ஆட்டத்தை புறந்தள்ளி விட முடியுமா? தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சச்சினின் சதம்? ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது அந்த ஒரு சிக்ஸ் குறித்து தான்.
சிக்ஸ் அடித்தால் உலக கோப்பை என்றால் யுவராஜ் எல்லாம் ஆறு உலக கோப்பை வென்று கொடுத்திருப்பார். 2007 டி20 உலக கோப்பையில் அவர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தவர். 2011 உலக கோப்பையில் தொடர் நாயகனும் அவர் தான். ஆனால் இன்னும் நாம் இத்தனை ஆண்டாக சிக்ஸ் குறித்து மட்டும் தான் பேசுகிறோம்” என தெரிவித்துள்ளார்.