தி ஹண்ரட்: பில்லிங்ஸ் அதிரடியில் வெற்றியை ரூசித்த ஓவல்!
இங்கிலாந்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் போட்டியில் ஓவல் இன்விசிபிள் - மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மான்செஸ்டர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஓவல் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், சாம் பில்லிங்ஸின் அதிரடியான ஆட்டத்தால் 100 ரன்களைக் கடந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம் பில்லிங்ஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் ஓவல் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை எடுத்தது. மான்செஸ்டர் அணி தரப்பில் 15 பந்துகளை வீசிய ஃபிரட் கிளாசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இமாலய இலக்கை துரத்திய மான்செஸ்டர் அணி எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இன்னிங்ஸ் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஓவல் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண், நாதன் சௌடர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் ஓவல் இன்விசிபிள் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.