PAK vs AUS, 3rd Test: ஷாஹின், நசீம் அபாரம்; 391 ரன்னில் ஆஸி ஆல் அவுட்!

Updated: Tue, Mar 22 2022 16:42 IST
Image Source: Google

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரை 7 ரன்னில் வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி, லபுஷேனை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கினார்.  8 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தனர். 

சிறப்பாக பேட்டிங் ஆடிய உஸ்மான் கவாஜா அரைசதம் அடிக்க, அவரைத்தொடர்ந்து ஸ்மித்தும் அரைசதம் அடித்தார். ஸ்மித் 59 ரன்களில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய உஸ்மான் கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

ஸ்டீவ் ஸ்மித்தை நசீம் ஷாவும், உஸ்மான் கவாஜாவை சஜித் கானும் வீழ்த்தினர். 5ம் வரிசையில் இறங்கிய டிராவிஸ் ஹெட்டை 26 ரன்னில் நசீம் ஷா வீழ்த்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் அடித்திருந்தது.

2ஆம் நாளான இன்றைய ஆட்டத்தை கேமரூன் க்ரீன்(20) மற்றும் அலெக்ஸ் கேரி (8) ஆகிய இருவரும் தொடர்ந்தனர். இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து 6வது விக்கெட்டுக்கு 135 ரன்களை சேர்த்தனர். அலெக்ஸ் கேரி 67 ரன்களுக்கும் கேமரூன் க்ரீன் 79 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, கடைசி 3 விக்கெட்டுகள் மளமளவென விழுந்து 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

அபாரமாக பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை