PAK vs AUS, 3rd Test (Day 1): மீண்டும் சதத்தை தவறவிட்ட கவாஜா; ஆஸ்திரேலியா முன்னிலை!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - உஸ்மான் கவாஜா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த இணை அரைசதம் கடந்து அசத்தினர். பின்னர் 59 ரன்களில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்து நடையைக் கட்ட, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் கவாஜா 91 ரன்களில் ஆட்டமிழந்ததுடன், 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டார்.
பின்னர் களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட்டும் 26 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் - அலெக்ஸ் கேரி இணை பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் மேலும் விக்கெட்டுகள் ஏதும் விளாமல் பார்த்துக்கொண்டனர்.
இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்ப்பில் கேமரூன் க்ரீன் 20 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.