PAK vs AUS: திடீரென பயங்கர குண்டுவெடிப்பு;ஆஸி - பாக். டெஸ்ட் தொடரில் பரபரப்பு!
தீவிரவாத அச்சுறுத்தல்களால் பாகிஸ்தானுக்கு எந்தவொரு அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றன. கடந்தாண்டு கூட நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் கூட சுற்றுப்பயணம் திட்டமிட்டு விட்டு பாதுகாப்பு குறைவு காரணமாக வெளியேறின.
இப்படிபட்ட சூழல் இருக்கும் போது தான் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டிற்கு சென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று இந்த போட்டி நடந்துக்கொண்டிருந்த போது, சில கிலோ மீட்டர் தூரம் அருகே உள்ள பெஷ்வார் பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 50 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் வாரியமும் தற்போது பதற்றத்துடன் உள்ளனர். அங்கு எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லையென அறிக்கை வந்தவுடன் தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள குண்டுவெடிப்பால் அவர்கள் தொடர்ந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பார்களா? அல்லது பாகிஸ்தானை விட்டு வெளியேறுவார்களா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதில் ஆஸ்திரேலிய வாரியம் தெளிவாக இருக்கும். எனவே இன்று இரவுக்குள் அவர்கள் அங்கிருந்து தாய் நாட்டிற்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தற்போது வரை 1 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.