PAK vs AUS, 3rd Test: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களும் டிராவில் முடிந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் லாகூரிலுள்ள கடாஃபி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலும் ஜோஷ் ஹசில்வுட், ஸ்காட் போலண்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், "கடந்த ஆட்டத்தில் 11 வீரர்களும் விளையாடிய விதம் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல நிலையில் வர அவர்களுக்கு கூடுதலாக இரண்டு நாள்கள் வழங்கப்பட்டன. காயங்கள் பற்றிய பிரச்னை ஏதும் இல்லை. அனைவரும் புத்துணர்ச்சியுடனே உள்ளனர். எனவே, அதே 11 வீரர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
2 வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு மட்டும் விளையாடும்போது, ரிவர்ஸ் ஸ்விங்க் மிகப் பெரிய விஷயமாக இருக்கும். கடந்த ஆட்டத்தில் ஸ்டார்க் பிரமாதமாக விளையாடினார். ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலன்ட் போன்றோரை அணியில் சேர்க்காமல் இருப்பது எப்போதுமே கடினமானதுதான். ஆனால், இடதுகை பந்துவீச்சாளராக, காற்றில் கூடுதல் வேகமும் என ஸ்டார்க் வேறுபாடு கொண்டு வருகிறார். 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு அது சிறந்த வாய்ப்பாக நினைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்வெப்சன், நாதன் லயான்.