PAK vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 90 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி ராவல் பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய டிம் செய்ஃபெர்ட் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டிம் ராபின்சன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் -மார்க் சாப்மேன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் இதில் ஃபாக்ஸ்கிராஃப்ட் 13 ரன்களுக்கும், மார்க் சாப்மேன் 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் ஒரு ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 4 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, கோல் மெக்கன்ஸி 15 ரன்களோடு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய இஷ் சோதி, பென் சியர்ஸ், பென் லிஸ்டர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், முகமது அமீர், அப்ரார் அஹ்மத் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 91 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.