PAK vs SA : ஃபகர் ஸ்மான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் 11 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த மாலன் - வொண்டர் டௌசன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் மாலன் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த வொண்டர் டௌசன் அரைசதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 19.3 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களை மட்டுமே குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக வொண்டர் டௌசன் 52 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய முகமது ரிஸ்வான் ரன் ஏதுமின்றியும், பாபர் அசாம் 24 ரன்களிலும், முகமது ஹபீஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபகர் ஸமான் அரைசதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் 19.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஃபஹீம் அஷ்ரஃப் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.