PAK vs ZIM 2nd test: இரட்டை சதம் விளாசிய அபித் அலி; தொடக்கம் முதலே திணறும் ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய 2ஆம் நாள் ஆட்டத்தை அபித் அலியும் சஜித் கானும் தொடர்ந்தனர். சஜித் கான் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய முகமது ரிஸ்வான் 21 ரன்னிலும், ஹசன் அலி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அதனால் 341 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில், தொடர்ந்து அபாரமாக ஆடிய அபித் அலி இரட்டைச் சதமடித்தார். அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடிய நௌமன் அலி 97 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அத்துடன் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதனால் 8 விக்கெட் இழப்பிற்கு 510 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக அபித் அலி 215 ரன்களையும், அசார் அலி 126 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் களமிறங்கியது முதலே சீரான இடைவெளியில் ஒற்றை இலக்கத்திற்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் முசாகண்டா ரன் ஏதுமின்றியும், கெவின் கசுசா 4 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் பிரண்டன் டெய்லர் 9 ரன்னிலும், ஷும்பா 2 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 47 ரன்னுக்கு ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ரெஜிஸ் சகாப்வா 28 ரன்கள் அடித்து 2ஆம் நாள் ஆட்டநேர முடிவின் போது களத்தில் இருந்தார்.
இதனால் 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் ரெஜிஸ் சகாப்வா 28 ரன்களுடனும், டெண்டாய் சிசோரா ஒரு ரன்னுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர உள்ளனர்.