ஆசிய கோப்பை 2022: ஹாங்காங்கை பந்தாடி, சூப்பர் 4-ல் நுழைந்தது பாகிஸ்தான்!

Updated: Fri, Sep 02 2022 22:45 IST
Image Source: Google

ஆசியக் கோப்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இந்தப் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங் காங் அணியின் கேப்டன் நிஷாகத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களில் வெளியேற அடுத்து ஃபகர் ஸமான் களம் கண்டார். 

முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான் ஜோடி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான் என இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 129ஆக இருந்தபோது ஃபகர் ஸமான் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களமிறங்கிய குஷ்தில் ஷாவும் தன்பங்கிற்கு அதிரடியில் மிரட்டினார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. முகமது ரிஸ்வான் 78 ரன்களுடனும், குஷ்தில் ஷா 35 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஹாங்காங் அணியில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எட்ட முடியாமல் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு திருபினர். அதிலும் பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான், முகமது நவாஸ் ஆகியோர் தங்களது அபாரமான பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடவைத்தனர்.

இதனால் ஹாங்காங் அணி 10.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 38 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 4 விக்கெட்டுகளையும், முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதிப்பெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை