சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்ற ஐசிசி திட்டம்?
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்குமா இல்லையா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. ஏனெனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய மறுத்துள்ளது.
இதனால் இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்திய அணியின் இந்த முடிவின் காரணமாக தொடரை நடத்துவதில் பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்களும் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் மட்டுமே நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியாக உள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி இப்போது இந்த தொடரை ஹைபிரிட் மாடலில் விளையாட பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாவிட்டால், தொடரை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை அவர்களிடமிருந்து பறிக்க ஐசிசி முடிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணிக்கான போட்டிகளை நடத்த ஹைப்ரிட் மாடலை பின்பற்றுமாறு பாகிஸ்தானுக்கு ஐசிசி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடன்படவில்லை என்றால், இத்தொடரானது முழுமையாக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் என்றும், அதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஐசிசி இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இத்தொடரில் இந்திய அணி விளையாட மறுக்கும் பட்சத்தில், இரு நாடுகள் இடையேயான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை இந்திய அணியுடன் எந்தவிதமான போட்டியிலும் பாகிஸ்தான் விளையாடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதற்கிடையே சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பது தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்குமாறு ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேசமயம் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடைபெறுமா என்ற சந்தேமும் வலுத்துள்ளது.