ஐபிஎல் குறித்த கேள்வியால் திகைத்து நின்ற பாபர் ஆசாம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் இறுதி மோதலில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி கடந்த 2009ஆம் ஆண்டும் இங்கிலாந்து அணி 2010ஆம் ஆண்டும் கடைசியாக டி20 உலகக்கோப்பையை வென்றன. எனவே இரு அணிகளுமே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் கோப்பை வெல்ல முயற்சித்து வருகின்றன. இதனால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.
இதற்கு எப்படி பாகிஸ்தான் அணி தயாராகிறது என்பது குறித்து பேச கேப்டன் பாபர் அசாம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திடீரென அவரிடம் ஐபிஎல் குறித்து கேட்கப்பட்டது. அதாவது, " ஐபிஎல்-ன் பயன்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகின்றன. ஒருவேளை ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினால் உதவியாக இருக்கும் என நினைக்கிறீர்களா? என கேட்கப்பட்டது.
இதற்கு என்ன பதில் கொடுப்பது என புரியாமல் திகைத்துப்போன பாபர் அசாம் பதற்றமடைந்தார். பின்னர் பாகிஸ்தான் அணியின் நிர்வாகி ஒருவர், இது உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பு, எனவே அதை பற்றி மட்டும் பேசலாம் எனக்கூறினார்.
இரு ஒருபுறம் இருக்க, ஐபிஎல்-க்கு எதிரான குரல்கள் தொடங்கியுள்ளன. இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருவதால் தான் ஆஸ்திரேலிய களத்தை சமாளிக்க முடியவில்லை. அவர்கள் அயல்நாட்டு தொடர்களில் பங்கேற்றால் தான் டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.