ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாதனைப் படைத்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது.
ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, தொடக்கத்திலிருந்தே அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து, பிளே ஆஃப் மற்றும் ஃபைனல் ஆகிய 2 நாக் அவுட் போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் தவித்து, இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்த ஹர்திக் பாண்டியா மீது இந்த ஐபிஎல் சீசனில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதை ஈடுகட்டும் விதமாக பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் தன்னை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.
ஐபிஎல்லில் மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்து தனது கேப்டன்சி திறனை நிரூபித்ததால் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று பேசப்படுகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தினார். பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஹெட்மயர் ஆகிய ராஜஸ்தான் அணியின் 3 முக்கியமான பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 34 ரன்கள் அடித்து குஜராத் அணியை வெற்றி பெறச்செய்தார் பாண்டியா.
அதன்விளைவாக ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதன்மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற 3ஆவது கேப்டன் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
இதற்கு முன், 2015 ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித்தும், 2009 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி கேப்டன் அனில் கும்ப்ளேவும் இந்த சாதனையை படைத்துள்ளனர். ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற 3ஆவது கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆவார். தோனி கூட இந்த சாதனையை செய்ததில்லை.