நாங்கள் பதற்றமின்றி விளையாடினாலே போதும் - பாபர் ஆசம்!

Updated: Fri, Oct 22 2021 18:30 IST
'Past is history': Babar Azam on India's unbeaten record against Pakistan in World Cups (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த 17ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் நாளை முதல் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

இந்த தொடரின் மிக முக்கிய போட்டியாக ரசிகர்கள் பலராலும் பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி 24ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டுமின்றி தற்போதே இந்த போட்டி குறித்த சுவாரசியமும் பெருகியுள்ளது. ஏற்கனவே உலக கோப்பை தொடர்களில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரும் இந்திய அணி இம்முறையும் தங்களது ஆதிக்கத்தை தொடர நினைக்கும். அதே வேளையில் உலக கோப்பையில் இந்தியாவின் வெற்றிகரமான பயணத்தை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் அணியும் முயற்சிக்கும்.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தற்போது சம பலத்துடன் உள்ளதால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

ஏற்கனவே இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் ? என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வர தற்போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பாபர் ஆசம், “இந்த முறை நாங்கள் மிகப்பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகமாக வைத்துள்ளோம். அதுமட்டுமின்றி கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு முக்கியமில்லை. தற்போது நாங்கள் உள்ள வலிமையில் நிச்சயம் எல்லா அணிகளையும் எங்களால் எதிர்க்க முடியும் என்று தோன்றுகிறது. அது போன்றே இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் நான் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் அணியை பதட்டமில்லாமல் வழி நடத்துவேன்.

நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக பதற்றமின்றி ஆடினால் பிரஷரை சரியான விதத்தில் கையாள முடியும். அப்படி கையாளும்போது இந்திய அணியை நாங்கள் எளிதாக வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது. நான் பாகிஸ்தான் அணிக்கு வந்ததிலிருந்து 3,4 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் விளையாடி வருகிறோம். எனவே இங்குள்ள மைதானங்களின் அனைத்து சூழ்நிலைகளும் எங்களுக்கு தெரியும்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

எனவே நிச்சயம் நாங்கள் அதனை அறிந்து விளையாடுவோம். இந்தியாவை எதிர்கொள்ளும் போது கூடுதல் கவனத்துடன் நாங்கள் விளையாட இருக்கிறோம். நிச்சயம் எங்களால் அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை