பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!

Updated: Sun, Oct 08 2023 23:15 IST
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள்  உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வெறும் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன், ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

வெறும் 2 ரன்களுக்கு இந்திய அணி தனது முதல் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணிக்கு இந்த வெற்றி சாத்தியமே கிடையாது என கருதப்பட்ட நிலையில், 4ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி – கே.எல் ராகுல் கூட்டணி பேட்டிங்கில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு 165 ரன்கள் சேர்த்தது இந்திய அணியின் வெற்றியையும் உறுதி செய்தது. 

இதில் விராட் கோலி 85 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதி வரை ஆட்டமிழக்காத கே.எல் ராகுல் 97 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 41.2 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது. இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “பேட்டிங்கில் நாங்கள் சொதப்பிவிட்டோம் என்றே கருதுகிறேன். நாங்கள் குறைந்தது 50 ரன்களாவது கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். 200 ரன்களுக்குள்ளான இலக்கை கட்டுப்படுத்துவது சாதரண விசயம் கிடையாது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் மிக மிக சிறப்பாக செயல்பட்டனர். 

நாங்கள் வெறும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்த போட்டியை எதிர்கொண்டதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் 20 ஓவர்கள் கிடைப்பதே போதுமானது என்பதே எனது கருத்து. நாங்கள் இந்த போட்டியில் நாங்கள் இன்னும் கூடுதலான ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்பதே உண்மை. 

விராட் கோலி கொடுத்த கேட்ச்சை மிட்செல் மார்ஷ் தவறவிட்டது இயல்பானது தான், இந்த தொடரில் நாங்கள் 10 போட்டிகளில் விளையாட வேண்டியது உள்ளதால் இந்த ஒரு தோல்வியால் அனைத்தும் முற்றிலுமாக மாறிவிடாது என்றே கருதுகிறேன். தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை