உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; சீன் அபேட்டிற்கு வாய்ப்பு!

Updated: Wed, Sep 06 2023 13:45 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

முன்னதாக இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் தங்கள் உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து அறிவித்து வருகிறது. 

இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் இடம்பெற்றுள்ளார். சமீபமாக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் லெக் ஸ்பின்னர் சங்கா அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதே போல் வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸும் இல்லை.

ஸ்பின்னர்களாக ஆடம் ஸாம்பா, ஆஷ்டன் ஆகர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஜோஷ் இங்லிஸ் ரிசர்வ் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித், பாட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயமடைந்திருந்தாலும் உலகக் கோப்பைக்குள் தேறி விடுவார்கள் என்று அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா 8 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக இந்தப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஆடுகிறது. அதனால் செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐசிசி அனுமதி இல்லாமல் அணியில் மாற்றம் கொண்டு வர முடியும். எனவே இறுதி அணியில் லேசான மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உண்டு. கடைசி நேர இணைப்பாக டிம் டேவிட், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் போன்றோரும் அணிக்குள் வர வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அறிவித்த 18 வீரர்கள் கொண்ட தற்காலிக அணியிலிருந்து இப்போது உலகக் கோப்பை அணியில் இடம்பெறாமல் போன 3 வீரர்கள் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, தன்வீர் சங்கா ஆகியோர்களாவார்கள். 

கம்மின்ஸ், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் காயமடைந்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவைவாக பார்க்கப்பட்டாலும், உலகக்கோப்பை தொடருக்கு முன்  அணிக்கு திரும்புவார்கள் என்பதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் மாற்றம் இருக்கும். வார்னருடன் இறங்கப்போவது ட்ராவிஸ் ஹெட்டா அல்லது மிட்செல் மார்ஷா என்ற விவாதங்களும் போய்க்கொண்டிருக்கின்றன.

ஆனால், ட்ராவிஸ் ஹெட் பெரிய சக்ஸஸ் காட்டுவதால் அநேகமாக அவர்தான் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா தன் உலகக் கோப்பை முதல் போட்டியில் சென்னையில் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய அணியுடன் மோதுகிறது. 

ஆஸ்திரேலிய அணி: பாட் கமின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், ஆஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜாஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை