AUS vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

Updated: Mon, Nov 04 2024 17:28 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர்.  இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 12 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 24 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.

இதில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த பாபர் ஆசாம் 37 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் காம்ரன் குலாம் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த துணைக்கேப்டன் சல்மான் அலி ஆகவும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் முகமது ரிஸ்வானும் 44 ரன்னில் விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் களமிறங்கிய இர்ஃபான் கான் மாற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்த்தொடங்கியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய் ஷாஹீன் அஃப்ரிடி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, மறுப்பக்கம் நிதானமாக விளையாடி வந்த இர்ஃபான் கானும் 22 ரன்களில் சிங்கிள் எடுக்க முயற்சித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய நசீம் ஷா ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய ஹாரிஸ் ராவுஃப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுபக்கம் பவுண்டரியும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட நசீம் ஷா ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் தாலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக தொடங்கிய ஃபிரேசர் மெக்குர்க் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், மூன்றாவது விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

பின்னர் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்னிலும், ஜோஷ் இங்கிலிஸ் 49 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 16 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும், ஆரோன் ஹார்டி 10 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, சீசன் அபோட்டும் 13 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 33.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தன் அணியை வீழ்த்தி, இந்த ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை