இப்போட்டியில் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட முடிவெடுத்தோம் - சாம் கரண்!

Updated: Thu, May 02 2024 13:17 IST
இப்போட்டியில் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட முடிவெடுத்தோம் - சாம் கரண்! (Image Source: Google)

 

சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

அதன்பின் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரஹானே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வின் போன்ற வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்த நிலையில் 62 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் மகேந்திர சிங் தோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ஹர்ப்ரீத் பிரா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் - ரைலீ ரூஸோவ் இணை அதிரடியாக விளையாடியதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 46 ரன்களில் ஜானி பேர்ஸ்டோவும், 43 ரன்களில் ரைலீ ரூஸோவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டனர். பின்னர் இணைந்த ஷஷாங் சிங் - சாம் கரண் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 25 ரன்களையும், சாம் கரண் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண், “இந்த போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் சென்னைக்கு வந்து சிஎஸ்கே அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளை பெறுவது எப்போதும் ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். கடந்த ஆண்டு சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தோம். ஆனால் எதிரணிகளை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடித்தோம். இந்த முறையும் அப்படித்தான் இருக்கிறது.

ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறோம். மேலும் இதே அணிக்கு எதிராக நாங்கள் அடுத்த போட்டியில் விளையாடவுள்ளோம்.மேலும் சென்னையில் நீங்கள் விளையாடும் போது மைதானத்தின் தன்மை மற்றும், பனியின் தாக்கம் குறித்து அறிவீர்கள்.  அதன் காரணமாக நாங்கள் இந்தப் போட்டியில் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட முடிவெடுத்தோம். ரபாடாவை பவர் பிளே ஓவர்களிலும், அதன்பின் ஸ்பின்னர்களையும் பயன்படுத்த முடிவெடுத்தோம்.  அந்தத் திட்டம் எங்களுக்கு கைக்கொடுத்தது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் சஹார் அற்புதமாக பந்து வீசினார். அதனால் தோனிக்கு எதிராக 19ஆவது ஓவரில் பந்துவீச முடியுமா என்று அவரிடம் கேட்ட போது, உடனடியாக தயாரானார்.  ஏனென்றால் வேகப்பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக ரன்களுக்கு சென்றனர். சில நேரங்களில் வித்தியாசமாகச் செயல்பட வேண்டும். அப்போதும்தான் வெற்றி பெற முடியும். இன்றைய போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது." என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை