PAK vs ENG, 6th T20I: சால்ட் காட்டடி; தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 5 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகிக்கும் நிலையில், 6வது டி20 போட்டி இன்று லாகூரில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும் ஆடிவருகின்றன. லாகூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் ஆடாததால் அறிமுக வீரர் முகமது ஹாரிஸ், பாபர் அசாமுடன் தொடக்க வீரராக களமிறங்கினர். அறிமுக போட்டியில் ஹாரிஸ் 7 ரன்களுக்கும், ஷான் மசூத் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஹைதர் அலி 18 ரன்களும், இஃப்டிகார் அகமது 31 ரன்களும் அடித்தனர். ஆசிஃப் அலி 9 ரன்கள் மட்டுமே அடித்தார்.
ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். தொடக்கம் முதலே பொறுப்புடன் ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பாபர் அசாம்.
பாபர் அசாம் சரியாக ஸ்கோர் செய்யாமல் இருந்துவந்தது, டி20 உலக கோப்பைக்கு முன் பாகிஸ்தான் அணிக்கு கவலையளித்த நிலையில், இன்றைய போட்டியில் அவர் அபாரமாக பேட்டிங் விளையாடியது பாகிஸ்தான் அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகமளித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் - பிலிப் சால்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தைக் கொடுதனர். இதில் அபாரமாக விளையாடிய பில்ப் சால்ட் 19 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸ் 27, டேவிட் மாலன் 26 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க பென் டக்கெட்டின் உதவியுடன் இறுதிவரை களத்தில் இருந்த சால்ட் 88 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி வெறும் 14.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3-3 என்ற கணக்கில் தொடரை மீண்டும் சமன்செய்துள்ளது.