யாஷ்பால் சர்மா மறைவுக்கு பிரபலங்களின் இரங்கல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மாவுக்கு இன்று காலை 7.40 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
66 வயதான யாஷ்பால் சர்மா 1978ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். அப்போது அவர் 26 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமானார். வலக்கை ஆட்டக்காரரான யாஷ்பால் சர்மா, 37 டெஸ்ட் மற்றும் 42 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி முறையே 1,606 மற்றும் 883 ரன்கள் எடுத்துள்ளார்.
1983ஆம் ஆண்டு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இறுதி ஆட்டத்தில் 11 ரன்கள் எடுத்திருந்தார். இவர் கடைசியாக 1985ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஆடியிருந்தார்.
இந்நிலையில் இவரது இறப்பு செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில்,“கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மறைந்த செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் நடந்த முக்கிய போட்டிகளின் போது அவரது குறிப்பிடத்தக்க ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் முக்கியமான பங்கைக் கொண்டிருந்தன. அவரது குடும்பத்தினருக்கும், பின்தொடர்பவர்களுக்கும், குழு உறுப்பினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில்,“யாஷ்பால் சர்மாவின் மறைவால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அளிக்கிறது. 1983 உலகக் கோப்பையின் போது அவர் பேட் செய்வதைப் பார்த்த நினைவுகள் என்னிடம் உள்ளன. இந்திய கிரிக்கெட்டில் அவர் செய்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். யாஷ்பால் சர்மாவின் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.