இந்தியா vs நியூசிலாந்து - இரண்டாவது டி20 போட்டி முன்னோட்டம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டி-20 போட்டியில் இந்தியா வென்றாலும், ரோஹித் சர்மாவின் அணி பல தவறுகளை செய்தனர். எனினும் டாஸ் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்ததால் இந்திய அணி தப்பியது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்பதால் இந்திய ரசிகர்கள் 2ஆவது டி20 போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியை எளிதில் வெல்ல வாய்ப்பு கிடைத்தும் இந்தியா அதனை டென்சனாக மாற்றியது. அதற்கு காரணம் நடுவரிசையில் களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தான். திறமையான வீரராக அறியப்பட்ட அவர், தமக்கு கேப்டன்ஷிப் கிடைக்கவில்லையே என்று விரக்தியில் இருப்பதை போல் ஆடினார். மேலும் இந்திய வீரர்கள் சிலர் கேட்ச், ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டனர்.இதனை குறிப்பு எடுத்து கொண்ட டிராவிட், குறிப்பிட்ட வீரர்களுக்கு அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது
இன்றைய காலக்கட்டத்தில் டாஸ் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு அது கடினமான சூழலை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால், இதனை குறையாக சொல்லாமல், அதற்கும் சேர்த்து பந்துவீச்சாளர்கள் தயாராக வேண்டும். இதனை எதிர்கொள்ள சில பந்துவீச்சாளர்கள் ஈரமான பந்தில் பந்துவீசி பயிற்சி செய்வார்கள், அந்த பயிற்சியை இந்திய வீரர்கள் மேற்கொள்ள வேண்டும்
இந்திய அணியில் தேர்வாகியும்,பெஞ்சில் அஸ்வின் அமர்த்தப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் பலருக்கு உணர்த்தி இருப்பார். அஸ்வினின் நான்கு ஓவர் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே இந்திய அணியின் வெற்றி அமையும். பேட்டிங்கில் ரோகித் சர்மாவும், சூரியகுமார் யாதவும் அதிரடியாக விளையாடுவது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை தருகிறது. திறமையான கே.எல்.ராகுல், இன்றைய ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
Also Read: T20 World Cup 2021
சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது முதலிடத்தில் உள்ளார்.இன்றைய ஆட்டத்தில் கப்தில் 11 ரன்களை எடுத்தால் கோலியை பின்னுக்கு தள்ளி, அவர் முதலிடத்தை பிடித்துவிடுவார், இதனால் கோலியின் சாதனைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.