பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய பாபர் ஆசாம்; இஸ்லாமாபாத் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஒன்பாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து பெஷாவர் ஸால்மி அணி பலப்பரீட்சை நடத்தியது. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ர இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ், ஹசீபுல்லா கான் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் அரைசதத்தை கடந்து விளையாடினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய பால் வால்டர் 19 ரன்களிலும், அதிரடி ஆல் ரவுண்டர் ரோவ்மன் பாவெல் 8 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
ஆனால் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் அசாம் 59 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 111 ரன்களையும், ஆசிஃப் அலி 17 ரன்களையும் சேர்த்து ஃபினீஷிங்கை கொடுத்தனர். இதன்மூல பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்துள்ளது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் கேப்டன் ஷதாப் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.