பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி கிங்ஸ் அபார வெற்றி!

Updated: Wed, Mar 06 2024 20:18 IST
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி கிங்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)

ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 22அவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது. 

இதையடுத்து களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சௌத் சகீல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஜேசன் ராய் 15 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌத் சகீல் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கவாஜா நஃபே 17 ரன்களையு, அகீல் ஹொசைன் 14 ரன்களையும், கேப்டன் ரைலீ ரூஸோவ் 10 ரன்களையும் சேர்த்ததைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கராச்சி அணி தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய கராச்சி அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஷான் மசூத் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த டிம் செய்ஃபெர்ட் - ஜேம்ஸ் வின்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் செய்ஃபெர்ட் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சோயப் மாலிக் 27 ரன்களையும், இர்ஃபான் கான் 4 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹசன் அலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை