பிஎஸ்எல் 2024: ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடி; கராச்சி கிங்ஸை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!

Updated: Mon, Feb 19 2024 12:26 IST
பிஎஸ்எல் 2024: ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடி; கராச்சி கிங்ஸை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்! (Image Source: Google)

பாகிஸ்தானின் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்பொட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு முகமது ரிஸ்வான் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிஸ்வான் 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த மாலன் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

பின்னர் 52 ரன்களில் டேவிட் மாலன் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரீஸா ஹென்றி 79 ரன்களையும், குஷ்டில் ஷா 28 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. கராச்சி அணி தரப்பில் மிர் ஹம்சா, டேனியல் சம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய கராச்சி கிங்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ், சாத் பைக் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஷான் மசூத் - ஷோயப் மாலிக் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 30 ரன்களில் ஷான் மசூத் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது நவாஸும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த சோயப் மாலிக் அரைசதம் கடந்த கையோடு 53 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை மட்டுமே சேர்த்தது. முல்தான் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி, அப்பாஸ் அஃப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு சீசன் பிஎஸ்எல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரீஸா ஹென்றிக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை