பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்டின் இறுதிநேர அதிரடி; இஸ்லாமாபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Feb 28 2024 21:29 IST
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்டின் இறுதிநேர அதிரடி; இஸ்லாமாபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு! (Image Source: Google)

பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய கராச்சி அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் செய்ஃபெர்ட் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து லூயிஸ் டு ப்ளூய் 24 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் சோயப் மலிக் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் கீரென் பொல்லார்ட் - இர்ஃபான் கான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வந்தனர். அதிலும் இறுதி கட்டத்தில் இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கீரென் பொல்லார்ட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 48 ரன்களையும், இர்ஃபான் கான் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் இமாத் வசிம், நசீம் ஷா, ஆகா சல்மான், ஹுனைன் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை