பிஎஸ்எல் 2024: வேண்டர் டுசென் சதம் வீண்; லாகூரை வீழ்த்தி பெஷாவர் த்ரில் வெற்றி!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சைம் அயுப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இன்னிங்ஸின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளியதுடன், முதல் விக்கெட்டிற்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து மிரட்டினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயுப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 48 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து இரண்டு ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து சதத்தை நெருங்கிய சைம் அயுப்பும் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 88 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் விளையாடிய ஆசிஃப் அலி 6 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கல் என 46 ரன்கள் சேர்த்திருந்த ரோவ்மன் பாவெல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்து அரைசதத்தை தவறவிட்டார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 12 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 211 ரன்களை குவித்தது. லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய லாகூர் கலந்தர்ஸ் அணியில் ஃபகர் ஸமான் 4 ரன்களுக்கும், ஃபர்ஹ்னா 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் ஒருமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஷாய் ஹோப் 29 ரன்களையும், அஷன் பாட்டி 20 ரன்களுக்கும், ஜஹந்தத் கான் 13 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இருப்பினும் இறுதிவரை முயற்சியை கைவிடாமல் அணியின் வெற்றிக்காக போராடிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 50 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன், 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 104 ரன்களைச் சேர்த்திருந்தார்.
ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே சேர்த்தது. பெஷாவர் அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.