பிஎஸ்எல் 2021: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெஸ்வர் ஸால்மி!
அபுதாபில் நடைபெற்று வரும் 6ஆவது சீசன் பிஎஸ்எல் தொடர் இறுதிப் போட்டியை நெருங்கி விட்டது. இதில் நேற்று நடைபெற்ற 2ஆவது நாக் அவுட் போட்டியில் பெஸ்வர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் காலின் முன்ரோ, ஹசன் அலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹசன் அலி 46 ரன்களையும், காலின் முன்ரோ 44 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெஸ்வர் ஸால்மி அணியில் தொடக்க வீரர் காம்ரன் அக்மல் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ஜானதன் வெல்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். அதிலும் ஜானதன் வெல்ஸ் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதமடித்தார்.
அவர்களைத் தொடர்ந்து வந்த சோயப் மாலிக் 10 பந்துகளில் 32 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம் 16.5 ஓவர்களிலேயே பெஸ்வர் ஸால்மி அணி வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் பெஸ்வர் ஸால்மி அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - பெஸ்வர் ஸால்மி அணிகள் கோப்பைக்காக மோதவுள்ளனர்.