நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்வோம் - புஜாரா
இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.
இதற்காக இம்மாத தொடக்கத்தில் இந்திய அணி இங்கிலாந்து சென்றது. இப்போது தங்களுக்குள்ளாகவே இரு அணியாக பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நியூசிலாந்தோ இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்தியாவுக்கு எதிராக களமிறங்க உள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை பற்றி கவலையில்லை என்று இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய புஜாரா “டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியினர் இங்கிலாந்து மண்ணில் 2 டெஸ்டில் விளையாடி உள்ளனர். இது நிச்சயம் அவர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும். ஆனால் இறுதிப்போட்டி என்று வரும் போது நாங்கள் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
நன்றாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்குரிய திறமை எங்கள் அணியிடம் இருப்பதை அறிவோம். அதனால் மற்ற விஷயங்கள் பற்றி கவலையில்லை. தற்போது எங்களுக்குள் அணி பிரித்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி எங்களை தயார்படுத்தி வருகிறோம்.
இங்கிலாந்து மண்ணில் ஒரே நாளில் வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் விளையாடுவது ஒரு பேட்ஸ்மேனாக மிகவும் சவாலாக இருக்கும். அதாவது மழை குறுக்கிட்டு மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகு திடீரென மழை நின்றதும் களம் காணுகையில், இந்த இடைவெளியில் மறுபடியும் பேட் செய்யும் போது நீங்கள் சூழலை சரியாக புரிந்து கொண்டு விளையாட வேண்டியது அவசியம். மனரீதியாக வலுவாக இருக்க வேண்டும். அப்போது தான் சாதிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.