இந்த பேட்டிங் ஆர்டர் பெரும் பிரச்சனையாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!

Updated: Sat, Aug 14 2021 18:22 IST
Image Source: Google

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித்தும் ராகுலும் டாப் ஃபார்மில் அபாரமாக ஆடிவருகின்றனர். ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோரும் பங்களிப்பு செய்கின்றனர். ஆனால் சீனியர் வீரர்களான புஜாராவும் ரஹானேவும் தொடர்ச்சியாக சொதப்பிவருகின்றனர். 

புஜாராவும் ரஹானேவும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்தே ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகின்றனர். ரஹானேவாவது ஆஸ்திரேலியாவில் முக்கியமான போட்டியில் சதமடித்து அணியை காப்பாற்றினார். ஆனால் புஜாரா அதுகூட இல்லை. அந்த தொடர் முழுவதுமாகவே சொதப்பினார். அதன்பின்னர் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலுமே இவர்கள் சரியாக ஆடவில்லை.

தொடர் சொதப்பலின் விளைவாக, ஸ்கோர் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர்கள், அந்த அழுத்தத்திலேயே அடிக்க முயன்று விரைவில் ஆட்டமிழந்துவருகின்றனர். முதல் டெஸ்ட்டில் ரோஹித்தும் ராகுலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்களை சேர்த்து கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டர் சரிவால் இந்திய அணி 278 ரன்கள் மட்டுமே அடித்தது. புஜாரா 4 ரன்னிலும், ரஹானே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

லண்டனில் நடந்துவரும் 2ஆவது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் இருவரும் ஏமாற்றமளித்தனர். புஜாரா 9 ரன்களிலும், ரஹானே ஒரேயொரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான பேட்டிங் ஆர்டரான 3 மற்றும் 5ஆம் வரிசைகளில் இறங்கும் புஜாரா மற்றும் ரஹானேவின் தொடர் சொதப்பல் அணியை கடுமையாக பாதிக்கிறது. 4ஆம் வரிசையில் ஆடும் கேப்டன் கோலியும் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக ஆடுவதில்லை. அதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பெரும் பிரச்னையாக உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா,“இந்திய அணிக்கு 3 மற்றும் 5ஆம் பேட்டிங் ஆர்டர் பெரும் பிரச்னையாக ஊள்ளது. புஜாரா நிச்சயமற்ற தன்மையில் ஆடுகிறார். ரஹானேவும் தயக்கத்துடன் ஆடுகிறார். ஆண்டர்சன் வீசிய ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை விரட்டிச்சென்று ஆடி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரஹானே. இருவரும் தொடர்ந்து சிறப்பாக ஆட தவறுகின்றனர். விரைவில் அவர்கள் ஃபார்முக்கு வந்து நன்றாக ஆடுவார்கள் என நம்புகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை