மீண்டு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளது - மிதாலி ராஜ்
இந்திய மகளிர் அணி , இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று இங்கிலாந்து செல்லவுள்ளது.
மேலும் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது ஆர்வமாக உள்ளதாக இந்திய அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மிதாலி ராஜ், “2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது நானும் இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தேன். கிட்டத்தட்ட அது நடந்து தற்போது 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது மீண்டும் நாங்கள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது ஆர்வமாக உள்ளது.
அதேசமயம் தற்போதுள்ள இந்திய அணியில் சில வீராங்கனைகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். ஏனெனில் இது கிரிக்கெட்டின் பழமையான வடிவமாகும். அதிலும் வலிமை வாய்ந்த இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சற்று சிரமம் தான்” என்று தெரிவித்துள்ளார்.