IND vs NZ: முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணி குறித்து கம்பீரின் கருத்து!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட்டில் கேப்டன் விராட் கோலி ஆடவில்லை; 2ஆவது போட்டியில் தான் கோலி ஆடுகிறார். அதனால் முதல் டெஸ்ட்டில் அஜிங்க்யா ரஹானே கேப்டன்சி செய்கிறார். மேலும் காயம் காரணமாக கேஎல் ராகுலும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், ரஹானே கேப்டனாக இருப்பதால் தான் இன்னும் இந்திய அணியில் அவரால் ஆடமுடிகிறது என்றும், இது அவரது அதிர்ஷ்டம் என்றும் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய கம்பீர், “மயன்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும். 3ஆம் வரிசையில் புஜாரா இறங்குவார். 4ஆம் வரிசையில் ஷுப்மன் கில் ஆடலாம். 5 வரிசையில் ரஹானே.
ரஹானே அணியை வழிநடத்துவதால் தான் இந்திய அணியில் இன்னும் ஆடுகிறார். இது அவரது அதிர்ஷ்டம். அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ரஹானே இந்த தொடரிலும் சொதப்பும்பட்சத்தில் அணியில் அவரது இடம் சந்தேகம் தான். ஏனெனில் ஹனுமா விஹாரி இருக்கிறார். ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்களும் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். எனவே ரஹானே சொதப்பினால், அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.