ஐபிஎல் 2022: பத்து வருட சாதனையை உடைத்து ஜோஸ் பட்லர் புதிய சாதனை!

Updated: Sun, May 01 2022 15:54 IST
Rajasthan Royals batter Jos Buttler creates history, breaks Rahane’s long-standing record for the fr (Image Source: Google)

அசத்தலாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் ஒரு மாதங்களாக மும்பை நகரில் பல திரில்லர் திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை 8 தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதி அடைந்தது. 

இருப்பினும் கூட ஏற்கனவே 8 தோல்விகளை பதிவு செய்து விட்டதால் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்த வருடம் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லரின் ஆட்டம் மட்டுமே அந்த அணியின் ரசிகர்களை கொஞ்சம் குஷிப்படுத்தியது. இந்த போட்டி மட்டுமல்லாது இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 3 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 566* ரன்களை 70.75 என்ற அற்புதமான சராசரியில் 155.07 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்து ரன் மழை பொழிந்து வரும் அவர் ஆரஞ்சு தொப்பியை தன்னகத்தே வைத்துள்ளார்.

அதிலும் 3 சதங்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் முதல் பகுதியில் 3 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மென் அடுத்தடுத்த போட்டிகளில் சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் போன்ற சரித்திர சாதனைகளை படைத்துள்ளார். இப்படி மிரட்டலான பேட்டிங் செய்து வரும் அவருக்கு 2016இல் 973 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மன் என்ற விராட் கோலியின் பிரம்மாண்ட சாதனையை முறியடிக்கும் பொன்னான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்காக ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் அவர் இப்போதே படைத்துள்ளார். ஆம் இதற்கு முன் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்காக விளையாடிய இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே அந்த சீசனில் அற்புதமாக பேட்டிங் செய்து 6 அரை சதங்கள் உட்பட 16 போட்டிகளில் 560 ரன்கள் எடுத்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. 

தற்போது அதை 10 வருடங்கள் கழித்து முறியடித்துள்ள ஜோஸ் பட்லர் வெறும் 9 போட்டிகளிலேயே 566* ரன்களைக் குவித்து ராஜஸ்தானின் புதிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை