ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, May 11 2022 10:36 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடக்கும் 58ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - டிஒய் பாட்டில் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. நடப்புத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான ஊதா நிற தொப்பியும் ராஜஸ்தான் அணி வீரர்கள் வசம்தான் உள்ளது. 

அந்த அணியில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிவரும் ஜோஸ் பட்லர் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 3 அரை சதங்கள், 3 சதங்கள் உட்பட 618* ரன்களை 61.80 என்ற அபாரமான சராசரியில் குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார். 

அதேபோல் 11 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக திகழும் ராஜஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் வென்று, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்ய முயற்சிக்கும்.

மறுபுறம், டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 5ஆம் இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். 

டேவிட் வார்னர் (375 ரன்கள்), ரிஷப் பண்ட்  (281 ரன்கள்), பிருத்வி ஷா (259 ரன்கள்) பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர். குல்தீப் யாதவ் (18 விக்கெட்டுகள்), கலீல் அகமது  (16 விக்கெட்டுகள்) பவுலிங்கில் பலம் சேர்க்கின்றனர். டெல்லி அணி கடந்த ஆட்டத்தில் சென்னையிடம் படுதோல்வியை தழுவியது. மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப அந்த அணி முயற்சிக்கும்.

இந்த சீசனில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுவது இது 2ஆவது முறையாகும். ஏற்கனவே சந்தித்த 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் 15  ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. அப்போட்டியில் 222 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி, டெல்லியை 207 ரன்னில் சுருட்டி அசத்தியது. எனவே ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேசமயம் அந்த தோல்விக்கு பழிதீர்க்க டெல்லியும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 25
  • ராஜஸ்தான் வெற்றி - 13
  • டெல்லி வெற்றி - 12

உத்தேச அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், ஜிம்மி நீஷம் / ரஸ்ஸி வான் டெர் டுசென், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் - டேவிட் வார்னர், ஸ்ரீகர் பாரத், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கே), ரோவ்மேன் பவல், அக்சர் படேல், ரிபால் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிச் நோர்ட்ஜே

ஃபேண்டஸி லெவன்

  • கீப்பர் - ஜோஸ் பட்லர் , சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், ரோவ்மேன் பவல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ், ரவிச்சந்திரன் அஸ்வின்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், கலீல் அகமது, பிரசித் கிருஷ்ணா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை