ரஞ்சி கோப்பை 2022: தமிழக பந்துவீச்சில் தடுமாறும் சத்தீஷ்கர்!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று தொடங்கிய ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு - சத்தீஸ்கர் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி, 86 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தமிழ்நாடு அணியில் பாபா அபாரஜித் 101 ரன்களும் ஷாருக் கான் 28 ரன்களுடனும் களமிறங்கினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபாரஜித் 166 ரன்களிலும், ஷாருக் கான் 69 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 118 ஓவர்களில் தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 470 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிகளர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சத்தீஸ்கர் அணிக்கு தொடக்கமே அதிரச்சியளிக்கும் வகையில் சநித்யா ஹர்கட், அகில் ஹெர்வாட்கர், அசுதோஷ் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சத்தீஸ்கர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியில் ஹர்ப்ரீட் சிங் 47 ரன்களுடனும், ஷசாங் சிங் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 365 ரன்கள் பின் தங்கிய நிலையில் சத்தீஸ்கர் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.