ரஞ்சி கோப்பை 2024: முதல் இன்னிங்ஸில் சுருண்ட பஞ்சாப்; ஃபாலோ ஆனில் அபார ஆட்டம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் சி பிரிவுக்கான போட்டி ஒன்றில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேலம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி பாபா இந்திரஜித், விஜய் சங்கர் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 435 ரன்களைச் சேத்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 187 ரன்களையும், விஜய் சங்கர் 130 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் சுக்விந்தர் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரான் சிங் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 24 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அன்மொல்ப்ரீத் சிங் - நெஹால் வதேரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தி உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்மோல்ப்ரீத் சிங் 41 ரன்களிலும், நெஹால் வதேரா 43 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து 294 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பஞ்சாப் அணியில் அன்மோல் மல்ஹோத்ரா அரைசதம் கடந்து அசத்தினார்.
அதபின் 64 ரன்களில் அன்மோல் மல்ஹோத்ரா விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 274 ரன்காளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஜித் ராம் 6 விக்கெட்டுகளையும், கேப்டன் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 161 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பஞ்சாப் அணியில் பிரப்ஷிம்ரான் சிங், அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கட்டை இந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத்தொடர்ந்து அபிஷேக் சர்மா 36 ரன்களிலும், அன்மோல் மல்ஹோத்ரா 20 ரன்களிலும் என் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் இப்போட்டியில் நான்காவது விக்கெட்டாக களமிறங்கிய நெஹால் வதேரா அதிரடியாக விளையாடியதுடன் சதமடித்து அசத்தியதன் மூலம் பஞ்சாப் அணி முன்னிலைப் பெற்றது. இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்துள்ளது. இதில் நெஹால் வதேரா 103 ரன்களையும், மந்தீப் சிங் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.